தர்மபுரி: எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் ஏரி புறம்போக்கு பகுதியில் வசித்து வருவதால் அவர்களுக்கு அரசு விதிமுறைப்படி மின் இணைப்பு வழங்க முடியாத சூழ்நிலை நிலவியது. இதனால் அங்கு வசித்து வந்த மக்கள் மின்வசதி இன்றி சிரமப்பட்டு வந்தனர். இதனை அறிந்த தர்மபுரி எம்.பி.செந்தில்குமார் தனது சொந்த செலவில் 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சோலார் மூலம் மின் வசதி ஏற்படுத்திக் கொடுத்து உள்ளார்.
இந்த வசதியின் மூலம் அப்பகுதியில் வசிக்கும் மக்களும் அனைவரையும் போல மின்விளக்கு, தொலைக்காட்சி பெட்டி, ஃபேன் உள்ளிட்ட மின்சார பொருட்களை பயன்படுத்த முடியும். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் வழங்கப்பட்ட குளிர்சாதனவசதி உடன் கூடிய ஆம்புலன்சை கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.
தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயர் சிகிச்சைக்கு சேலம் உள்ளிட்ட வெளிப்பகுதிகளுக்கு செல்லும் நோயாளிகள் இதுவரை உயர்தரமான ஆம்புலன்ஸ் சேவைக்கு தனியாரை நாடும் சூழ்நிலை இருந்தது. இனி அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை பயன்படுத்த வழிவகை ஏற்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்,”தர்மபுரி ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை விரைவில் அதிநவீன சாலையாக அமைக்க, சென்னைக்கு நேரில் சென்று அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளதாகவும் விரைவில் பணிகள் நிறைவடையும் என்றும் தெரிவித்தார்.
அதியமான் கோட்டை மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது. ரயில்வே துறையிடம் உள்ள பாலம் மாநில நெடுஞ்சாலைத்துறை இடம் ஒப்படைத்த பிறகு அங்கிருந்து மாவட்ட ஆட்சியரிடம் சாலை ஒப்படைக்கும் பொழுது விரைவில் பாலம் திறக்க ஏற்பாடுகள் செய்யப்படும். நவீன ஆம்புலன்ஸில் வென்டிலேட்டர் வசதி. உள்ளிட்ட உயிர்காக்கும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி இருக்கிறேன்.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு தமிழக அரசிடமிருந்து கோரிக்கை கடிதத்தை மத்திய அரசு கேட்டுள்ளது. தமிழக அரசின் அதிகாரிகளை சந்தித்து மத்திய அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த நிதி ஆண்டில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் கல்லூரி அமைக்க முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார். அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றுகொண்டு இருக்கிறது கண்டிப்பாக வருவார்கள் என்றார்.
தன்னை பற்றி வரும் மீம்ஸ் நன்றாக இருக்கிறது, தொடர்ந்து அதனை அவர்கள் செய்ய வேண்டும். மன அழுத்த வாழ்க்கையில் அதை பார்த்தால் தான் மக்களுக்கு நன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டில் தான் மீம்ஸ் அதிகமாக இருக்கிறது, இது பாராட்ட வேண்டியது. மீம்ஸ் போடுபவர்களை ஊக்குவிக்க வேண்டும் மீம்ஸ் இல்லை என்றால் வாழ்க்கை போர் அடிக்கும்” என்றார்.
இதையும் படிங்க: ‘தலைவன் ஒருவன் தான் என்போம், சமரசம் எங்கள் வாழ்வென்போம்’ - சசிகலாவுடன் ஈபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தை முயற்சி..!