தருமபுரி: நாடாளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான செந்தில்குமார், டெல்லியில் மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை நேரடியாக சந்தித்து சுங்கச்சாவடி அமைக்கப்படுவது குறித்து கடிதம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அக்கடிதத்தில், 'தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தொப்பூர் முதல் மேட்டூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இருவழிப்பாதையினை சுமார் 33 கிலோ மீட்டர் தற்பொழுது அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அகலப்படுத்தும் பணி முடிந்தவுடன் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தொப்பூர் முதல் மேட்டூர் வரையில் ஒரு இடத்தில் சுங்கச்சாவடி அமைப்பதற்கும், ஈரோடு மாவட்ட பகுதியில் மற்றொரு சுங்கச்சாவடி அமைப்பதற்கும் தயாராக உள்ளனர்.
இதுபோன்ற இருவழிப் பாதையை சுமார் 1.5 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்தி விட்டு, சுங்கச் சாவடி அமைப்பது என்பது இப்பாதையை பயன்படுத்தும் பல நூறு கிராம மக்களின் அன்றாடப் போக்குவரத்தைப் பாதிக்கும். மேலும் நான்கு சக்கர வாகனங்கள், கார் மற்றும் மினி லாரிகள் போன்றவற்றின் போக்குவரத்து பாதிக்கும். அதே நேரத்தில் தற்பொழுது விரிவாக்கம் செய்யப்படும் சாலை சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதற்கு தகுதி இல்லாத சாலை ஆகும்.
இதையும் படிங்க: நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே..சாலை விதிகளை மீறிய காவல் அதிகாரிக்கு அபராதம்..காவல் ஆணையரின் அசத்தல் நடவடிக்கை
இது வரை நான்கு வழிச் சாலையில் மட்டுமே தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சுங்கச்சாவடிகள் அமைத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்பொழுது இதுபோன்ற இருவழிச் சாலை வழிப் பாதையிலும் சுங்கம் வசூலிப்பதை இப்பகுதி பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆகவே, தாங்கள் சுங்கச் சாவடி அமைப்பதை உடனடியாக கைவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், ’ஏற்கனவே இது சம்பந்தமாக கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இருமுறை சென்னையில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறையின் பொது மேலாளர் அவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்திலும், ஜூலை முதல் வாரத்திலும் புதுடெல்லியில் அமைந்துள்ள தமிழ்நாடு பிரிவு முதுநிலை பொது மேலாளர் அவர்களிடமும் விரிவாக கடிதம் வாயிலாக சுங்கச் சாவடி அமைக்கக் கூடாது என நான் எதிர்ப்பு தெரிவித்துள்ளேன். பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கைவிட வேண்டும்.
இருவழிச் சாலை பாதையில் அதுவும் சுமார் 1.5 மீட்டர் மட்டுமே விரிவாக்கம் செய்து அதில் சுங்கச் சாவடி அமைப்பதை தொகுதி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை மிகத் தெளிவாக நிதின்கட்கரியுடன் எடுத்துரைத்துள்ளேன். அவரும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்’ என தருமபுரி எம்.பி. செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டம் - முன்னாள் திமுக அமைச்சர் மீதான வழக்கு ரத்து!