விழுப்புரம் மாவட்டம் தடாகம் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் தங்கராஜ் - எழிலரசி தம்பதியரின் மகள் பிரியங்கா. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இவர், கடந்த 2018-19 கல்வியாண்டில் கிருஷ்ணகிரி ஊத்தங்கரையில் உள்ள வித்தியமந்திர் மெட்ரிக் பள்ளியில் மேல்நிலை கல்விக்காகச் சேர்க்கப்பட்டார். பிரியங்காவின் சொந்த ஊா் தொலைவில் உள்ள காரணத்தினால் அவர் பெற்றோர் அவரை பள்ளி விடுதியிலேயே சேர்த்தனர்.
இந்நிலையில் கடந்த 9ஆம் தேதியன்று பிரியங்காவின் தாயார் அவரை நேரில் பார்த்துவிட்டு சென்றார். இதையடுத்து நேற்று மாலை பிரியங்கா தனது தாயை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஆனால் இன்று அதிகாலை 4 மணியளவில் விடுதி காப்பாளர் பிரியங்காவின் தாயை தொடர்புகொண்டு விடுதியின் மூன்றாவது மாடியில் பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரின் உடலை தருமபுரி அரசு மருத்துவமனையில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரியங்காவின் தாய், அவரது உறவினர்களுடன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று பிரியங்காவின் சடலத்தைப் பார்த்து கதறி அழுதார். மேலும் நேற்று மாலை நன்றாக தொலைபேசியில் பேசிய தன் மகள் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது நம்ப முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட பிரியங்கா, மனஅழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொள்வதாகக் கடிதம் எழுதி வைத்துள்ளதாகக் கூறி கடிதம் ஒன்று பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்தக் கடிதத்தில் இருக்கிற கையெழுத்து தன் மகளுடையது இல்லை என பிரியங்காவின் தாய் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
பிரியங்காவிற்கு மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு துணிச்சல் இல்லை என்றும், விடுதியில் தங்கியிருந்த மாணவிகளிடம் கேட்டபோது நன்றாகப் படித்துவிட்டு உறங்கப் போனதாகத் தெரிவித்தனர் எனவும் பிரியங்காவின் உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் பிரியங்காவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அதனை உரிய முறையில் தமிழ்நாடு அரசும், அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டு, இதுபோன்று மாணவிகளின் இறப்புகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரியங்காவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சாக்குப் பையில் துண்டு துண்டாக ஆண் சடலம் - மிஷ்கின் பட பாணியில் தேனியில் கொடூரம்!