கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கர்நாடக கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேற்று (08.08.19) காலை முதல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
தண்ணீரின் அளவு பிற்பகலில் படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி கபினி அணையில் இருந்து வினாடிக்கு சுமார் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான கனஅடி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 40ஆயிரம் கனஅடி தண்ணீர் இன்று தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு வரத்தொடங்கியது. மேலும் தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தொடர்ந்து காவிரி ஆற்றின் தண்ணீர் வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முதல் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் பாதுகாப்பு பணிகளில் தொடர்ந்து காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள், ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.