தென்னிந்தியாவின் நயாகரா என அழைக்கப்படும் ஒகேனக்கல் அருவியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர். நேற்று (பிப்.8) ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மெயின் அருவில் குளித்து மகிழ்ந்தனர்.
அதில் சிலர் எச்சரிக்கையையும் மீறி தடை செய்யப்பட்ட பகுதிகளில் குளித்தனர். இதனிடையே, ஆலம்பாடி பகுதியில் ஒரு இளைஞர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைக் கண்டு அங்கிருந்த பெண் ஒருவர் அவரைக் காப்பாற்ற அபாயக் குரல் எழுப்பவே அங்கிருந்த நால்வர் வேகமாக தண்ணீருக்குள் பாய்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞரைக் காப்பாற்றினர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தியும் சிலா் தடை செய்யப்பட்ட பகுதிகளில் குளித்து வருகின்றனர். ஒகேனக்கல், ஆலம்பாடி பகுதிகளில் பாய்ந்தோடும் காவிரி ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் சென்றாலும் அப்பகுதியில் உள்ள சுழல் காரணமாக அங்கு செல்பவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்படும் நிகழ்வு தொடர் கதையாகி வருகிறது.
இதையும் படிங்க:நவமலையில் வசிக்க வீடு இல்லை... குடிக்க மட்டும் தண்ணீர் இணைப்பு