தர்மபுரி: காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் காவிரி கரையோர பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு நீர் வரத்து கடந்த மூன்று நாட்களாக அதிகரித்தது. நீர்வத்து நேற்று (ஆகஸ்ட் 2)மாலை ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பரிசில் இயக்கவும், குளிக்கவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒகேனக்கல் ஊட்டமலை மற்றும் காவிரி கரையோர பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பது, மீன் பிடிப்பது கரையோர பகுதி என்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
பாதுகாப்பு பணியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை,காவல் துறை, தீயணைப்பு பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:மின்னல் தாக்கியதில் பற்றி எரிந்த தென்னை மரம்...!