தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்ற பிரவேஷ் குமார் குற்றச் சம்பவங்கள், மது பாட்டில்கள் கடத்தல், குட்கா கடத்தல் குற்றச் செயல்கள் தடுத்து நிறுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட டி. குண்டு பகுதியில் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் துரைராஜ் தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கர்நாடக மாநில பகுதியிலிருந்து சேலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த மினி லாரியை காவலர்கள் சோதனை செய்தனர். சோதனையில் கால்நடைகள் தீவனம் தவிடு மூட்டைகள் இடையே குட்கா மூட்டைகள் இருப்பதைக் கண்டறிந்தனர். இச்சோதனையில் 53 மூட்டைகளில் ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா கடத்தியது தெரியவந்துள்ளது.
இக்கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கடத்தலில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் செந்தில், யுவராஜ் ஆகிய இருவரை காவலர்கள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கொத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் வாகனம் என்றும், தங்கள் இருவரையும் கர்நாடக மாநிலம் பிடதி அனுப்பிவைத்து பான் மசாலா பொருள்களை ஏற்றிவருமாறு அனுப்பியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இருவரின் வாக்குமூலத்தை அடுத்து காரிமங்கலம் காவலர்கள் சுப்பிரமணியைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். தருமபுரி காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கையால் மாவட்டத்தில் அடுத்தடுத்து மதுபாட்டில் கடத்தல், குட்கா கடத்தல் செய்வோரை காவலர்கள் அதிரடியாக கைதுசெய்து வருவது குறிப்பிடத்தக்கது.