தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் புகழ்பெற்ற சென்றாயப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கோயிலில் உள்ள பழங்கால ஐம்பொன் சிலைகள் பன்னெடுங்காலமாக திருடப்படுவதும், வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு அதியமான் கோட்டை சென்றாயப் பெருமாள் கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர்கள், பை ஒன்றை வீசிச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் பை ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்த காவலர்கள் பையை சோதனை செய்தனர்.
அதில், வெண்கலத்தால் ஆன சிறிய பெரிய அளவிலான பெருமாள்சிலை, கருடாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ராதாகிருஷ்ணன் சிலையும் இருந்துள்ளது. மேலும், 3 தங்க தாலியும் இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து கோயிலுக்கு படையெடுத்த அப்பகுதியினர், மர்ம பையில் கிடைத்த சுவாமி சிலைகளை ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர்.
சிலைகள் மற்றும் இவற்றை வீசிச் சென்ற நபர்கள் குறித்து நல்லம்பள்ளி வட்டாட்சியர் சவுகத் அலி தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.