தருமபுரி மாவட்டம் பிடமனேரி பகுதியைச் சேர்ந்தவர் நூர் முகமது. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஷேர் ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்.
இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக தனது ஆட்டோவில் பயணிப்பவர்களின் தாகத்தைத் தீர்க்கும் விதமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்கிவருகிறார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதையடுத்து, தனது வாடிக்கையாளர்களுக்காக இந்தச் சேவையை செய்துவருவதாக நூர் முகமது கூறுகிறார்.
மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்தச் சேவைக்காக நாள் ஒன்றுக்கு 60 ரூபாய் மட்டுமே தனக்கு செலவாவதாகவும், இது தன் மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் உற்சாகத்துடன் கூறியுள்ளார். மேலும், இவரின் சேவைக்காக பொதுமக்களும் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.