தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள பொம்மசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பி.எஸ்.அக்ரஹாரம் பகுதியில் சுமார் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்தக் கிராமத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறையின் சார்பில் கழிப்பறை கட்ட இடமில்லாத நபா்களை தோ்வு செய்து 21 குடும்பங்களுக்கு ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் கழிவறை கட்டிக் கொடுக்கப்பட்டது.
இந்தக் கழிப்பறையில் மேற்கூரை, கதவு மற்றும் தண்ணீர் போன்ற எவ்வித வசதியும் இல்லாமல் பயனாளிகள் பெயரில் கட்டி முடிக்கப்பட்டு கழிப்பறை கட்ட 12 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது என எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டப்பட்ட கழிப்பறைகள் 2017 - 2018ஆம் ஆண்டில் கட்டப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளது.
புதிதாக கட்டப்பட்ட கழிப்பிட பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில் கட்டடத்தின் கதவுகள் மற்றும் மேற்கூரை இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கழிப்பறை கட்டுமானத்தில் செய்யப்பட்டிருக்கும் ஊழல் குறித்து ஊர் மக்கள் கூறுகையில்,
தங்களது ஊரில் ஒரு சிலருக்கு மட்டும் கழிப்பறைகள் கட்டிக் கொடுத்து விட்டு பலருக்கு கழிப்பறை கட்டித் தராமல் ஏமாற்றி விட்டனர். ஒரு சிலருக்கு கழிப்பறை மட்டும் கட்டச்சொல்லி விட்டு பயனாளிகள் போல புகைப்படம் எடுத்துக் கொண்டு பணம் தராமல் ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு, நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதன் காரணமாக இப்பகுதியில் ஒப்பந்ததாரர் ஒருவர் ஊர் மக்களை மிரட்டி வருவதாகவும் அதனால் தாங்கள் ஊடகங்களுக்கு பேட்டி தர மறுக்கிறோம் என்று பயத்துடன் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஊராட்சி அலுவலா்கள் கடந்த 2017ஆம் ஆண்டு பொம்மசமுத்திரம் கிராமம் திறந்தவெளி மலம் கழித்தலற்ற கிராமம் என தனக்குத் தானே அறிவித்துக்கொண்டு தருமபுரி – பொன்னாகரம் சாலையில் பெயா் பலகை வைத்துக்கொண்டனா்.
இந்தக் கிராமத்தை மத்திய அரசு பணியாளா்களும் ஆய்வு செய்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனா். ஆனால், அரசின் வீட்டுக்கொரு கழிப்பறை திட்டம் வெறும் விளம்பர பலகையில் மட்டுமே உள்ளது.
இதுகுறித்து அலுவலர்கள் கூறுகையில், பழுதடைந்த கழிப்பறைகளை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் கதவு இல்லாத அனைத்து கழிப்பறைகளுக்கும் கதவு மற்றும் மேற்கூரை அமைத்துத் தரப்படும் என உறுதியளித்தனர்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் ஜோக்கர் பட பாணியில் கழிப்பறை மோசடி நடந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.