தருமபுரி மாவட்டத்தின் நகரப்பேருந்து நிலையத்தில் மிகப்பெரிய பூச்சந்தை செயல்பட்டுவருகிறது. இங்கிருந்து கேரளா, கர்நாடாக பகுதிகளுக்கு கனாகம்பரம், குண்டு மல்லி, சம்பங்கி, அரளி போன்ற பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. திருவிழா நேரங்களில் சுமார் 10 டன் வரை பூக்கள் விற்பனையாகின்றன.
இந்நிலையில் நல்லம்பள்ளி, தொப்பூர், பென்னாகரம், பாலக்கோடு, மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய பகுதிகளில் அதிகளவில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆடி மாதம் கோயில் திருவிழாக்கள் அதிகளவில் நடைபெறுவதால் பூக்களின் தேவை அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், நாளை வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
வறட்சியின் காரணமாக பூக்களின் வரத்து சரிந்து தேவை அதிகரித்ததால் இன்று கனகாம்பரம் பூ கிலோ 1000 ரூபாய்க்கும், குண்டுமல்லி ரூ.500-க்கும், சன்னமல்லி பூ ரூ.500-க்கும், சம்மங்கி பூ கிலோவுக்கு ரூ.160-க்கும் விற்பனையாகின்றன. தாமரை, தாழம்பூ உள்ளிட்டவை திருச்சியிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
தொடர்ந்து நாளையும் பூக்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.