தருமபுரி பாலக்கோடு அடுத்த நம்மாண்டஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (45). 10ஆம் வகுப்பு மட்டுமே படித்த இவர் பாளையத்தில் கிளினிக் ஒன்றை நடத்தி, பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்துவந்துள்ளார். இவர் குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தொடர்ந்து புகார்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து தருமபுரி மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் திலகம் தலைமையிலான சுகாதாரத் துறையினர் நடத்திய ஆய்வில், அனிதா முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு ஊசி, மருந்து, மாத்திரைகள் வழங்கி சிகிச்சை அளித்துவந்தது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, அவரது கிளினிக்கை சீல்வைத்து சுகாதாரப் பணியாளர்கள் மூடினர்.
பின்னர் இணை இயக்குநர் அளித்த புகாரின் அடிப்படையில் பஞ்சப்பள்ளி காவல் நிலைய காவல் துறையினர் அனிதா மீது வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட போலி மருத்துவர் அனிதாவிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
போலி மருத்துவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : இரும்புத்திரை திரைப்படத்திற்காக பிரத்யேக பைக்கை உருவாக்கிய பைக் திருட்டு கும்பல்!