தருமபுரி: தருமபுரி மாவட்டத்தின் மாரண்டஹள்ளி அருகே ஒரே நாளில் தாயையும் வழிகாட்டிகளையும் பறிகொடுத்த குட்டி யானைகளை கூட்டத்துடன் சேர்க்கும் பணியில் பரபரப்பாக ஈடுபட்டிருந்தார் பொம்மன். தன்னையும் மையப்படுத்திய Elephant Whisperers ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்ற போதும், அதன் சுவடு தெரியாமல் குட்டி யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
தருமபுரி மாவட்டம் காளிகவுண்டாம்பட்டியில் சட்டவிரோத மின்வேலியில் சிக்கி கடந்த மார்ச் 8ம் தேதி 3 யானைகள் உயிரிழந்தன. இந்த யானைக் கூட்டத்துடன் வந்த 2 குட்டி யானைகள், தங்களின் தாய் உயிரிழந்ததை உணர முடியாமல் அங்கேயே சுற்றி வந்தன. மற்ற பெரிய யானைகள் காட்டுக்குள் போய்விட்ட நிலையில், இந்த 2 குட்டிகளும் நிர்க்கதியாக காட்டுப்பகுதிக்குள் சுற்றின.
இந்த யானைக்குட்டிகளை அதன் இனத்தோடு சேர்க்கும்படி வனத்துறை உத்தரவிட்டது. இதனை ஏற்றுக்கொண்ட வனத்துறை குட்டிகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிப்பது அல்லது, போக்குகாட்டி விரட்டிச் சென்று கூட்டத்துடன் சேர்ப்பது என இரண்டு உத்திகளை வகுத்தனர். யானைக் குட்டிகளை கையாளுவதில் அனுபவமும், திறமையும் வாய்ந்த பொம்மனும் இக்குழுவில் முன்னிலையில் நின்றிருந்தார்.
இந்த சூழலில்தான் ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. அவரிடம் நாம் பேசிய போது, ஆவணப்படத்தில் காண்பிக்கப்பட்ட இரண்டு யானைக்குட்டிகளும் தற்போது தங்களின் கைக்கெட்டாத தூரத்தில் இருப்பதாக கவலையுடன் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தான் முதன் முதலில் ரகு என்ற குட்டி யானை முதன் முதலில் கண்டறியப்பட்டதாக தெரிவித்த அவர் நாய்கள் கடித்ததால் காயத்துடன் இருந்த ரகுவை பராமரிக்கும் பெரும் பொறுப்பை தானும், தனது மனைவி பெள்ளியும் இணைந்து ஏற்றுக் கொண்டதாக கூறினார்.
பெற்ற குழந்தையை காப்பாற்றுவது போன்று, ரகுவின் காயங்களை ஆற்றி அதனையும் வளர்த்தெடுத்ததாக கூறினார் பொம்மன். இதே போன்றுதான் அம்மு யானையும் சத்திய மங்கலத்திலிருந்து தன்னிடம் வந்து சேர்ந்ததாகவும் கூறினார். ஆனால் ஒரே நாளில் இந்த இரண்டு யானைகளையும் தங்களிடமிருந்து பிரித்து எடுத்துச் சென்றதாக கூறினார்.
இதுதான் விதி என்ற வனத்துறை அதிகாரிகளின் அறிவுரையை ஏற்று தான் வேறு யானையை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகவும். ஆனால் இன்றும் அந்த நாட்களை நினைத்துப் பார்த்தால் எனக்கும் என் மனைவிக்கும் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடிவதில்லை என கூறினார். ஆவணப்பட இயக்குநர் கார்த்திகியால் தான் தங்களுக்கு சர்வதே வெளிச்சம் கிடைத்தது என்கிறார் பொம்மன்.
யானைகளை அடக்கத் தெரிந்த மனிதர்களுக்கு தங்கள் மனதின் பாசத்தையும், உணர்ச்சி கொந்தளிப்புகளையும் அடக்கத் தெரிவதில்லை. இருப்பினும் கவலைகளை மறக்க முயற்சி செய்தவாறே பேருயிர்களாக வனத்தை ஆளப்போகும் குட்டிகளை காப்பாற்றும் வேலையை முனைப்புடன் தர்மபுரியில் பார்த்து வருகிறார் பொம்மன். தற்போது அந்த இரண்டு குட்டிகளும் வேறொரு யானைக் கூட்டத்துடன் இணைந்துள்ளன என்ற வனத்துறையின் தகவல் ஆறுதல் அளிக்கும் விதத்தில் உள்ளது.
இதையும் படிங்க: Elephant Whisperers: "பசியால் கற்களை சாப்பிட்ட பொம்மி" - காப்பாற்றியது எப்படி என விளக்கும் டாக்டர்