தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகே உள்ள சிகரலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். வழக்கம் போல் ஆடுமேய்க்க சிகரல அள்ளி அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது குட்டியுடன் இருந்த தாய் யானை, ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மாணிக்கத்தை துரத்தியது. இதில் நிலைக் குலைந்து கீழே விழந்த மாணிக்கத்தை, யானை காலால் மிதித்து கொன்றது. இது குறித்து ஆடு மேய்க்கும் தொழிலாளிகள், வனத்துறையினர், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், மாணிக்கத்தின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த மாணிக்கம் மிகவும் ஏழ்மை குடும்பத்தைச் சார்ந்தவர். அவரது வருவாயை நம்பியே மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்தனர். தற்போது யானை தாக்கி உயிரிழந்த மாணிக்கத்தின் குடும்பத்தின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு உயிரிழந்த மாணிக்கத்தின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று ஏரியூர் பகுதி மக்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.