தருமபுரி மாவட்டம் சோமனஅள்ளி அருகே உள்ள கோரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னசாமி. இவர், தனது கர்ப்பிணி மனைவி மகேஸ்வரி, மூன்று வயது குழந்தையுடம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக வந்தார்.
அப்போது, திடீரென குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனா். நல்வாய்ப்பாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு தண்ணீா் ஊற்றி காப்பாற்றினா்.
விவசாயி சின்னசாமி வைத்திருந்த மனுவில் “தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கப்பட்டுவிட்டது. தனக்கென்று இருந்த கொஞ்ச நிலமும் பறிபோய்விட்டது. உரிய இழப்பீடு வழங்கப்படும் என அப்போது மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய மலர்விழி வாக்குறுதியளித்தார், கடந்த பத்து மாதத்திற்கு மேலாகியும் இதுவரை இந்த இழப்பீடும் வழங்கவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இழப்பீடு வழங்காததைக் கண்டித்து விவசாயி திடீரென தீக்குளிக்க முயன்றதால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.