பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவு மருத்துவராகப் பணியாற்றி வருபவர் சிவகுமார் செந்தில் முருகன். இவர் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, மருத்துவமனை ஊழியர்கள் சிலரை உடந்தையாகக் கொண்டு, தான் சொந்தமாக நடத்தி வரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக, அம்மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவர் கனிமொழி முன்னதாக புகார் தெரிவித்திருந்தார்.
மேலும், பணியில் இல்லாத நாட்களிலும்கூட அரசு மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளை, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அவருக்குச் சொந்தமான தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும், அங்கு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளித்துவிட்டு, பின் இரண்டு, மூன்று நாட்கள் கழித்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து தொடர் சிகிச்சை வழங்குவதாகவும் சிவகுமார் செந்தில் முருகன் மீது புகார் அளித்து கனிமொழி, உயர் அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பினார்.
மருத்துவ அலுவலரின் இந்தப் புகாரின் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சிவகுமார் செந்தில் முருகனை பென்னாகரம் அரசு மருத்துவமனையில் இருந்து கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் குருநாதன் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பென்னாகரம் மருத்துவமனையில் இரண்டு தினங்களுக்கு முன் செவிலியரை தாக்கியதாக மருத்துவா் ஜெ. கனிமொழி, அரூா் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பென்னாகரம் அரசு மருத்துவமனையிலிருந்து இரண்டு மருத்துவா்கள் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் பென்னாகரம் மருத்துவமனையில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: கிராமப் பொது நிதியிலிருந்து 93 குடும்பங்களுக்கு 2000 ரூபாய் நிதி உதவி