மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் மணி, அரூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ”எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு என்ன பெயர் என்றே தெரியாது, திமுக கூட்டணியை எதிர்த்து நிற்கும் கூட்டணி சனீஸ்வரன் கூட்டணியாக உள்ளது. ஏனென்றால் ஒன்பது கடவுள் ஒரு முகத்தை ஒரு கடவுள்கூட பார்க்கமுடியாது தனித்தனி சிந்தனையாக இருக்கும். அதேபோல்தான் அதிமுக கூட்டணி கட்சிகள் உள்ளன.
தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த அன்புமணி தருமபுரி தொகுதிக்கு செய்தது என்ன? கல்வி மத்தியப் பட்டியலில் இருக்கிறது. அதனால்தான் சமச்சீர் கல்வி இல்லாமல் நீட் தேர்வு வந்திருக்கிறது. தமிழ்நாடு மக்கள்மீது நான்கு லட்சம் கோடி கடன் சுமை இருக்கிறது. ஒவ்வொருவர் மீதும் ரூ.55 ஆயிரம் கடன் சுமை இருக்கிறது. இதற்கு திறமையற்ற நிர்வாகம்தான் காரணம்.
குஜாராத்தில் மூன்றாயிரம் கோடி ரூபாய் செலவில் பட்டேலுக்கு சிலை வைக்க முன்வந்த பிரதமர் மோடி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை கண்டுகொள்ளவில்லை” என்றார்.
இந்துசமய கடவுள் சனீஸ்வரனை எ.வ.வேலு கட்சிகளுடன் ஒப்பிட்டு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எ.வ.வேலுவின் இந்த பேச்சுக்கு இந்து முன்னணியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.