தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள சீரியம்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக விநியோகிக்கப்படும் தண்ணீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து அப்பகுதி இளைஞர்கள் சிலர் நீர்தேக்கத் தொட்டியைப் பார்த்தனர். அப்போது தொட்டியின் மேற்புறம் இடிந்து தொட்டிக்குள் விழுந்தது மட்டுமல்லாது, அதில் தேங்கியிருந்த நீர் பச்சை நிறமாக மாறிருப்பதையும் பார்த்து புகைப்படங்கள் எடுத்தனர். நீர்த்தேக்கத் தொட்டி மேற்புறம் திறந்த வெளியாகவுள்ளதால் பறவைகளின் எச்சம், தூசி நிறைந்து பாசி பாடிந்துள்ளது. இத்தண்ணீரை கிராம மக்களுக்கு விநியோகம் செய்வதால் மக்களுக்கு பலவித உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
மாவட்ட நிர்வாகம் முப்பது ஆண்டுகள் பழமையான சேதமடைந்த தொட்டியை உடனே அகற்றிவிட்டு, புதியதாக கட்டப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டிக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டுமென அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தரமற்ற 19 குடிநீர் ஆலைகள் மீது குற்றவியல் நடவடிக்கை: உணவு பாதுகாப்புத் துறை அதிரடி!