தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சேர்வராயன் மலைத் தொடரின் அடிவாரத்தில் வாணியாறு அணை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
65 அடி உயரம் கொண்ட இந்த அணையில் நீர் தேக்குவதன் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், ஆலபுரம், தென்கரைக்கோட்டை, பறையப்பட்டி புதூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஏரிகளில் நீர் நிரப்பப்பட்டு, சுமார் பத்தாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வாணியாறு அணை தண்ணீர் இன்றி வறண்டு, மேய்ச்சல் நிலமாக மாறியுள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது.
மேலும்,ஏற்காடுமலை பகுதி பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்தது.
பருவமழையால் வாணியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்பொழுது அணையில் 32 அடி வரை தண்ணீர் மட்டம் உயா்ந்துள்ளது. அடுத்த இருமாதங்களில் பருவமழை தொடரும் என்பதால் விரைவாக வாணியாறு அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வறண்டு கிடந்த அணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் அணையில் 50 சதவீதம் நீர் தேங்கியுள்ள நிலையில், பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.