கரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி வருவதால், வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிழைப்புக்காக வெளியூரில் கூலி வேலைக்குச் சென்ற பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த கூலித் தொழிலாளர்கள் உணவு, வருவாய் இல்லாத காரணத்தால், சொந்த ஊருக்குத் திரும்புகின்றனர். போக்குவரத்து வசதி இல்லாததால், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, அண்டை மாவட்டங்களிலிருந்து நடை பயணமாக சொந்த ஊருக்குச் செல்கின்றனர். இதற்கிடையே பெங்களூரு பகுதியில் கூலி வேலைக்குச் சென்ற கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு, நடை பயணமாகவே சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் காரிமங்கலம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த கூலித் தொழிலாளர்களை, காவல் துறையினர் விசாரித்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். பரிசோதனைக்குப் பிறகு செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இவர்கள் மூன்று நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதியான பின்பு, செட்டிகரை பொறியியல் கல்லூரி வளாகத்தில் இருந்து அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல காவல் துறையினர் அனுமதித்தனா். ஆனால் தருமபுரியில் இருந்து கள்ளக்குறிச்சி செல்வதற்கு வாகன வசதி இல்லாத காரணத்தால், நடந்தே சொந்த ஊருக்குச் செல்ல ஆரம்பித்தனர்.
கூலித் தொழிலாளர்கள் நடந்து செல்வதைக் கவனித்த தருமபுரி மதிக்கோன்பாளையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான காவல் துறையினர், அவர்களை விசாரித்து, அவர்களுக்குத் தேவையான உணவுகளை ஏற்பாடு செய்து வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து தருமபுரி வழியாக திண்டுக்கல் சென்ற சரக்கு லாரியை நிறுத்தி கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் சேலத்தில் இறக்கி விடுமாறு லாரி ஓட்டுநருக்கு அறிவுறுத்தி லாரியில் அனுப்பி வைத்தனர். மேலும் சேலம் காவல் துறையினரிடம் பேசி சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி செல்ல ஏற்பாடு செய்தனர்.
இதையும் படிங்க... தருமபுரியில் 400 காவலர்களுக்கு மளிகைப்பொருள் தொகுப்புகள் வழங்கிய ஆட்சியர்