தருமபுரி: தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மொரப்பூர் ஒன்றியத்தில் கருவேலம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் உள்ளனர். இவர்கள் முன்னாள் அமைச்சரும் தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் முன்னிலையில், நேற்று அதிமுகவில் இணைந்தனர்.
பாமகவினர் அதிமுகவில் இணையும் இந்த நிகழ்ச்சியில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.சம்பத்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், பாமகவினா் அதிமுகவில் இணைந்த விவகாரம் பாட்டாளி மக்கள் கட்சி மாநில நிர்வாகி வரை சென்றது.
இதனைத்தொடர்ந்து, பாமகவின் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் என்பவர், ஏராளமான இளைஞர்கள் பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த செய்தியை அறிந்ததும், அவர்களை நேரில் சந்தித்து என்ன நடந்தது? என்பது குறித்து கேட்டறிந்தார். இதன் பின்னர், நேற்று (ஜூலை 2) காலையில் அதிமுகவில் இணைந்த பாட்டாளி மக்கள் கட்சினா் தங்களை பாமக மாவட்டச்செயலாளா் அரசாங்கம் முன்னிலையில் மீண்டும் பாமகவில் இணைத்துக் கொண்டதாக பாட்டாளி மக்கள் கட்சியினர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமூக வலைதளப் பதிவில் அரூர் சட்டமன்றத் தொகுதி மொரப்பூர் ஒன்றியத்தில் கருவேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விளையாட்டு மைதானம் வேண்டி அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் அவர்களிடம் முறையிட்டபோது, 'நீங்கள் அனைவரும் அதிமுகவில் இணைந்தால் மட்டுமே உங்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்துத் தர முடியும்' எனக் கூறி பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் இணைய வற்புறுத்தியதாக பாமகவினர் முகநூல் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: “காங்கிரஸ் அரசியலில் இல்லாத நிலை உருவாக வேண்டும்” - அண்ணாமலை பேச்சு
இதனைத்தொடர்ந்து இந்த கருவேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் காலையில் அதிமுக துண்டுகளுடனும் நேற்றிரவு பாட்டாளி மக்கள் கட்சி துண்டுகளுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிரதானக் கட்சிகள் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இத்தகைய நிலையில் பாமகவினர் விளையாட்டு மைதானம் அமைத்துத் தரக் கோரியதைத் தொடர்ந்து, காலையில் அதிமுகவிலும் இரவில் மீண்டும் பாமகவிலும் இணைந்து கொண்டு அக்கட்சிகளின் துண்டுகளுடன் கம்பீரமாக புகைப்படத்திற்குப் போஸ் கொடுத்து நின்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில், அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டுமெனில், தங்களது அதிமுக கட்சியில் இணைந்தால் மட்டுமே அமைத்துத் தரப்படும் என்று அவர் கூறியதாக வெளியான தகவல் அப்பகுதியில் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றமால், இவ்வாறு நிர்பந்திக்கலாமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதனைத்தொடர்ந்து, காலையில் அதிமுகவில் இணைந்த இளைஞர்கள் அதிமுகவிலிருந்து விலகி மீண்டும் அதே நாளில் பாமகவில் இணைந்த விஷயம் அம்மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, வேண்டியவை கிடைப்பதற்காக ஒரே நாளில் இவ்வாறு கட்சிவிட்டு கட்சி தாவுவது ஒன்றும் புதியதல்ல என்பதை இந்த சம்பவம் எடுத்துரைத்துள்ளது. இதுபோன்ற கட்சி தாவல்கள் இந்த அதிமுக மற்றும் பாமக மட்டுமில்லாது பிற கட்சிகளிடமும் சகஜமாக உள்ளநிலையில், இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Dhanush in Tirupathi:இதுவரை இல்லாத புது லுக்கில் தனுஷ்; திருப்பதியில் மொட்டை அடித்து தரிசனம்!