தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவரும் அதேப்பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்வபரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோயில் ஒன்றில் திருமணம் செய்துக்கொண்டு பெங்களூருவில் வசித்துவந்தனர் .
இதையறிந்த பிரியாவின் உறவினர் இருவரையும் அழைத்து வந்து, தாக்கியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் பிரியாவின் உறவினரும், அரசு பேருந்து நடத்துனருமான தர்மலிங்கம் என்பவர் மூன்று தினங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரை கடத்திச் சென்று ஒகேனக்கல் காட்டில் வைத்து தாக்கியதோடு மட்டுமில்லாமல், வாயில் பூச்சிக்கொல்லி மருந்தை திணித்து கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.
சத்தம் கேட்டு அவ்வழியே சென்றவர்கள் ஓடிவருவதை பார்த்த அந்த நபர்கள் தர்மலிங்கத்தை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். பின்பு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தர்மலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூன்று தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடத்துனர் தர்மலிங்கம், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த அவரது உறவினர்கள் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஐந்து மருத்துவர்கள் முன்னிலையில், உடற்கூறு ஆய்வு நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.