தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார்(23) என்பவரும் தாளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் இருவரும் காதல் திருமணம் செய்வதற்காக தங்களின் வீட்டை விட்டு வெளியேறினர். அவர்களை பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் அஜித்குமாரின் உறவினர்கள் தேடிவந்துள்ளனர். அப்போது பிரியாவின் உறவினர்கள் அஜித்குமாரின் உறவினர்களை சமாதானம் பேசுவதற்காக அழைத்துச் சென்று அவர்களைத் தாக்கியாகத் தெரிகிறது.
இந்நிலையில், அஜித்குமாரின் உறவினர் நாகராணி என்பவர் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி மனு ஒன்றை அளித்துள்ளார். அம்மனுவில் "எங்களையும் எங்கள் உறவினர்களையும், பிரியாவின் உறவினர்கள் சாதி ஆணவப்படுகொலை செய்ய முயற்சிக்கின்றனர். அவர்களால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே எங்கள் உயிருக்கு பாதுகாப்பு தரவேண்டும். எங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காதல் திருமணம் செய்துகொள்ள வீட்டை விட்டு வெளியேறிய பிரியா, அஜித்குமார் ஆகிய இருவரையும் கண்டுபிடித்து தங்களிடம் கொண்டுவந்து ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.