பாமக மாநில தலைவரும், பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய கர்நாடக அரசுக்கு பாமக கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. தமிழ்நாட்டின் நீர் ஆதாரத்தை கர்நாடக அரசு தட்டி பறிக்கிறது.
மேகதாது அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுவரும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும், 12 மாவட்டங்களில் பாசன ஆதாரமாக விளங்கும் காவிரியில் அணை கட்டும் திட்டத்தை தடுக்க ஒன்றிய அரசு தமிழ்நாட்டினுடைய உரிமையை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வை தமிழ்நாட்டில் நுழையவிடக் கூடாது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வே போதுமானது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறைக்க ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மாநில அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் நீர் ஆதாரத்தை பெருக்க கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் அவசியம் தமிழ்நாட்டில் அனைத்து ஆறுகளின் குறுக்கேயும் 5 கி.மீ க்கு ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும்
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புளோரைடு இல்லாத குடிநீர் வழங்க வேண்டும். அனைத்து சர்க்கரை ஆலைகளிலும் எத்தனால் உற்பத்தியை தொடங்க ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளிடம் தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதலை குறைத்துவிட்டது. ஆவின் கொள்முதலுக்கு நிகராக அனைத்து தனியார் பால் கொள்முதல் விலை தர வேண்டும்" என தெரிவித்தார்.