தருமபுரி நகர்மன்றக் கூட்டம் நகராட்சித் தலைவர் லட்சுமி நாட்டான்மாது தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளைத் தெரிவித்தனர்.
9-வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் கூறுகையில், தருமபுரி சந்தைப்பேட்டை பள்ளியில் 120க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருவதாகவும், அங்குள்ள கழிப்பறைக்கு கதவு இல்லாததால் மாணவிகள் சிரமப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பிரச்னை தொடர்பாக ஏற்கனவே மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து குப்பைகள் தெருவோரம் கொட்டப்படுவதாகவும் அதிகாரிகளுக்கு முறையாக எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மதிகோண் பாளையத்தில் இருந்து தருமபுரி நகரத்திற்குள் நுழையும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாகவும், அந்தவழியாக வரும் மக்கள் அதீத ஆபத்துடன் வந்து சேர வேண்டி இருப்பதாகவும் கூறினார். மேலும் அடிக்கடி விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதால் அந்தப் பகுதியில் புதிய சாலை அமைக்கவோ அல்லது மண் கொட்டி சீரமைக்க வேண்டும் என்றார்.
அப்போது நகராட்சி நல அலுவலர் ராஜரத்தினம், கவுன்சிலருக்கு எதிராக கையை உயர்த்தி ஒருமையில் எது என்று பேசியதாக கூறப்படுகிறது. இதனால் நகர் மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நகராட்சி நகர மன்ற உறுப்பினர் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டிய அரசு அலுவலர்கள், கவுன்சிலர்களுடன் மோதும் போக்கில் கையை உயர்த்தியதற்கு மற்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சுருக்குமடி வலை பயன்படுத்த அனுமதி; உச்சநீதிமன்ற விதித்த நிபந்தனை என்ன?