தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட மூவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பாப்பாரப்பட்டி காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும்,காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலா்களுக்கும் சுகாதாரத் துறையினர் கரோனா பரிசோதனை செய்தனா். பின்னர்,பாப்பாரப்பட்டி பேருராட்சி பணியாளா்கள் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தனா்.
இதேபோல், அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிய ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் தற்காலிகமாக ஐந்து நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது.
வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, அலுவலக வளாகம் முழுவதும் பேரூராட்சிப் பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர். அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.