தருமபுரி: அன்னசாகரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான சுப்பிரமணிய சாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்குச் சொந்தமாக அருகில் உள்ள இடத்தில் கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அந்தப் பகுதியில் உள்ள மக்கள் வீடு கட்டி பல தலைமுறைகளாக, தற்போது வரை வசித்து வருகின்றனர்.
கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, போலியாக பட்டா பெற்றுள்ளதாக பல்வேறு அலுவலகங்களில் சிலர் மனு கொடுத்துள்ளனர். இதனால் தருமபுரி பத்திரப் பதிவு அலுவலகத்தில் அன்னசாகரம் பகுதி குடியிருப்புகளின் பத்திரப் பதிவினை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து கடந்து சில மாதங்களுக்கு முன்பு, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சார் ஆட்சியர் இந்த பகுதிகளில் விசாரணை செய்து கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட இடம், அறநிலைத்துறைக்குச் சொந்தமானது தான் என அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
மேலும் அன்னசாகரம் குடியிருப்புகளில் பத்திரப்பதிவுக்கு தடை என மாவட்ட வருவாய் அலுவலர் அறிக்கை கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து கடந்த 6 மாதங்களாக பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். ஆனால், பதிவு செய்து தராமல், அலைக்கழித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், 100க்கும் மேற்பட்டோர் இன்று தருமபுரி ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு, அலுவலகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களது இடத்திற்கு போலி ஆவணங்கள் கொடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட பத்திரப் பதிவினை, தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் அறிக்கை கொடுத்தும், பதிவு செய்யாமல் அலைக்கழித்து வருகின்றனர். எனவே நிறுத்தி வைக்கப்பட்ட பத்திரப்பதிவை செய்து கொடுக்கும் வரை, அலுவலகத்தை விட்டு வெளியேற மாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையறிந்த தருமபுரி நகர காவல் துறையினர், வருவாய் துறையினர், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிறுத்தி வைக்கப்பட்ட தங்களது பத்திரப் பதிவை செய்து தரும் வரை போராட்டம் தொடரும் என கிராம மக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பத்திரப் பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: படித்துவிட்டு வேலையில்லையா.? உதவித்தொகை பெற உடனே அப்ளை பண்ணுங்க.. தருமபுரி ஆட்சியர் அறிவிப்பு!