பென்னாகரம் அடுத்த பவளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவலிங்கம்-சசிகலா தம்பதி. இவர்களின் 17 வயது மகளுக்கு திருமணம் செய்ய முயற்சிப்பதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 1077 என்ற தொலைபேசி எண்ணுக்குப் புகார் வந்துள்ளது.
இப்புகார் சைல்டு லைன் அமைப்பிற்கு தெரிவிக்கப்பட்டு திருமணம் நடைபெறும் குறிப்பிட்ட பகுதிக்கு சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்த ஊரக நல அலுவலர்கள் சென்றுள்ளனர்.
அங்கு திருமணம் நடைபெறுவதாக இருந்த 17 வயது சிறுமிக்கு சைல்டு லைன் அலுவலர்கள் ஆலோசனைகளை வழங்கி அவரை மீட்டு வள்ளலார் குழந்தைகள் காப்பகத்திற்கு பேருந்து மூலம் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனை அறிந்த சிறுமியின் தந்தை சிவலிங்கம் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்களோடு இருசக்கர வாகனத்தில் அவர்கள் பயணம் செய்யும் பேருந்தைத் துரத்திச் சென்று மாவட்ட ஆட்சியர் இல்லம் அருகே பேருந்தை நிறுத்தி சைல்டுலைன் அலுவலர்களை கடுமையாகத் தாக்கிவிட்டு சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தாக்குதலில் காயமடைந்த சைல்டு லைன் உறுப்பினர் வைத்தீஸ்வரி அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் தற்போது மீண்டும் குழந்தை திருமணம் தலை தூக்கியுள்ளது.
மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்து குழந்தை திருமணத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.