தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் பாப்பிரெட்டிபட்டி, அரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான மின்னணுவாக்கு இயந்திரங்கள் தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு பிரமாண்ட திரையில் அவற்றை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வாக்கு மையத்தில் தலைமை காவலர் முருகேசன் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு ஆய்வு பணிக்கு வந்த காவல்துறை ஆய்வாளர் சாந்தம்மாள், முருகேசன் மதுபோதையில் இருந்ததை கண்டுபிடித்தார். பின்னர் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து பாதுகாப்பு பணியின் போது மதுபோதையில் இருந்த தலைமை காவலர் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.