கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடக மாநில அணைகள் தொடர்ந்து நிரம்பி வருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து 16 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிட்டது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் இன்று (ஆகஸ்ட் 6) காலை 11 மணிக்கு தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதியை வந்தடைந்தது.
காலை நிலவரப்படி நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாகவும்; நண்பகல் 1 மணி நிலவரப்படி 16 ஆயிரம் கனஅடியாகவும் இருந்த நீர் வரத்து, மாலை 3 மணி நிலவரப்படி 22 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
காவிரி நீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினியருவி உள்ளிட்டப் பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தருமபுரி மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் காவிரி கரையோரப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் தண்டோரா மூலம் அறிவுறுத்தியுள்ளது.
கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையிலிருந்து நேற்று (ஆகஸ்ட் 5) 50 ஆயிரம் கனஅடி வரை காவிரி ஆற்றில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஒகேனக்கல்லில் நீர்வரத்து இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தேனியில் சூறைக்காற்றால் 50 ஆயிரம் வாழை மரங்கள் நாசம்!