தர்மபுரி: பென்னாகரம் வட்டம், ஏரியூர் அஜ்ஜனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த அலமேலு (50) மாற்றுத் திறனாளி ஆவார். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் ஏழு பேர்.
இவரது பெற்றோருக்கு சொந்தமான பூர்வீக நிலத்தை இவருடன் பிறந்த சகோதரர்கள் தலா 10 ஏக்கர் வீதம் பாகம் பிரித்துக் கொண்டனர். இதையடுத்து அலமேலு திருமணம் செய்து கொண்டால், 90 சென்ட் நிலம் தருவதாகக் கூறி அவரது சகோதரரான சென்றாயப்பெருமாள் அவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
அண்ணன் ஏமாற்றியதாக புகார்
ஆனால் சொன்னபடி நிலம் தராத காரணத்தால், அலமேலுவின் கணவர் அவரை விட்டுச் சென்றுள்ளார். இதையடுத்து அலமேலு செய்வதறியாது மீண்டும் தனது பிறந்த வீட்டுக்குத் திரும்பிய நிலையில், அவரது பெற்றோர் ஜீவனாம்சமாக வைத்திருந்த ஐந்து ஏக்கர் நிலத்தையும், அவருக்கு தருவதாகக் கூறிய 90 சென்ட் நிலத்தையும் பென்னாகரம் காவல் நிலையத்தில் உளவுத்துறை காவலராக பணியாற்றும் சென்றாயப்பெருமாள் அவரது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து இது குறித்து அலமேலு தனது சகோதரனிடம் கேட்டபோது, அலமேலுவுக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தனது சொத்தை மீட்டுத் தருமாறும், கொலை மிரட்டல் விடுக்கும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அலமேலு புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு - போக்சோவில் ஒருவர் கைது