தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கொடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன், அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். பட்டியலினத்தைச் சேர்ந்த அச்சிறுவன் ஜூலை 15ஆம் தேதி அப்பகுதியில் உள்ள வயலுக்கு இயற்கை உபாதை கழிக்கச் சென்றார்.
அப்போது, ராஜசேகர் என்பவர் தன்னுடைய நிலத்தில் சிறுவன் இயற்கை உபாதை கழித்ததாகக் கூறி, அந்த சிறுவனை சாதி பெயரை கூறி கடுமையாக தாக்கியதோடு, மலத்தை சிறுவனின் கையால் அள்ள வைத்தாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து, சிறுவனின் தந்தை சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது.
வழக்கை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் சித்தரன்சன் மோகன்தாஸ், இச்சம்பவம் குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர், தருமபுரி மாவட்ட காவல் கண்காப்பாளர் ஆகியோர் நான்கு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.