கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகைக்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகா இன்று (ஏப்.20) முதல் தடை விதித்துள்ளார்.
ஒகேனக்கல் பகுதியில் வாழும் மக்களை தவிர மற்ற சுற்றுலா பயணிகள் மற்றும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மற்ற நபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பென்னாகரம் அடுத்த மடம் பகுதி சோதனை சாவடி காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இத்தடைக் காரணமாக ஒகேனக்கல் சுற்றுலாவை நம்பியுள்ள பரிசல் ஓட்டுபவர்கள், மீன் உணவு சமைப்பவர்கள், மசாஜ் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுற்றுலாவை நம்பி உள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை காரணமாக தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
இது குறித்து பரிசல் ஓட்டிகள் கூறுகையில், ஒகேனக்கல் பகுதியில் கரோனா முதல் அலை தொடங்கிய காலத்தில், 9 மாதங்கள் சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது வாழ்வாதாரமின்றி உணவுக்கு மிகவும் சிரமப்பட்டோம், எங்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை.
தற்போது மீண்டும் கரோனா இரண்டாவது அலை காரணமாக சுற்றுலாப் பயணி வருகைக்கு தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த முறையாவது எங்கள் குடும்பத்தை காப்பாற்ற நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பகல் நேரத்தில் வெளி மாவட்ட பேருந்துகள் இயக்கம்