தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காடுசெட்டிப்பட்டியில் இன்று காலை 9.45 மணிக்கு பெங்களுரிலிருந்து காரைக்கால் வழியே வந்த பயணிகள் ரயில் தடம் புரண்டது.
இதனால் பாலக்கோடு, தருமபுரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் மூன்று மணி நேரம் காத்திருந்தனர். மேலும் காடுசெட்டிப் பட்டி வனப்பகுதியில் மிக குறுகிய வளைவு பகுதி என்பதால் ரயிலின் இஞ்சின் உள்ள முன் பகுதி சக்கர பக்கவாட்டு தகடு கழன்று விழுந்ததால் இஞ்சின் பகுதியின் முன்பக்கம் இருந்த இரண்டு சக்கரமும் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டுள்ளது.
இதனை உணர்ந்த ரயில் ஓட்டுநர் சிங், சமயோசிதமாக ரயிலின் வேகத்தை படிப்படியாகக் குறைத்து பின் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு ரயில்வே அலுவலர்கள், காவல் துறையினர் ஆகியோர் விரைந்தனர்.
அதன் பின்னர் ரயில்வே பணியாளர்கள் உதவியோடு மாற்று இஞ்சின் பொருத்தப்பட்டு, மூன்று மணி நேரம் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு தண்டவாளத்தை சரி செய்து பின்பு ரயில் புறப்பட்டது. இந்த விபத்து குறித்து தருமபுரி ரயில்வே காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
மேலும் படிக்க: தவறவிட்ட பையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த ரயில்வே காவல் துறையினர்!