தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வின்போது மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்திய போர் கருவிகள், போர் வாள்கள், செப்புக் காசுகள், புத்தர் சிலைகள் என ஏராளமானப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு அரசு அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அருங்காட்சியத்தை வாரத்தில் ஐந்து நாட்கள் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தற்போது, கரோனா பரவல் காரணமாக அருங்காட்சியகம் மூடப்பட்டுள்ளது. பாராமரிப்புக்காக அருங்காட்சியக ஊழியர் அங்கு வந்தபோது அருங்காட்சியகத்தின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்பு இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த தர்மபுரி காவல்துறையினர் அங்கு சோதனையிட்டபோது ராஜராஜ சோழன் காலத்து முப்பது செப்புக் காசுகள், திப்பு சுல்தான் காலத்து போர்வாள் மூன்று, கணினி ஆகியவை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் மர்ம நபர்கள் பொருட்களை எடுத்துச் சென்றது பதிவாகியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி திருட்டுச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: இன்றும், நாளையும் 4,500 பேருந்துகள் இயக்கம்