தர்மபுரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று (நவ.01) குறை தீர் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்தது. பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 197 மனுக்கள் பெறப்பட்டன.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சின்னகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சின்னக்கண்ணு (65). இருபார்வையையும் இழந்த மாற்றுத்திறனாளியான இவர் கடந்த அக்.18இல் பணமதிப்பிழப்பான, 500, 1,000 நோட்டுக்கள், 65 ஆயிரத்துடன் வந்து பணத்தை மாற்றித் தருமாறு உதவி கேட்டார்.
அவருக்கு வங்கி மூலம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கூறிய நிலையில், சென்னை தியாகராய நகர்ப் பகுதியை சேர்ந்த பட்டாபி ராமன்(70) என்பவர் பத்திரிகைகளில் வெளியான செய்தியைப் பார்த்து அவருக்கு உதவிட, 65 ஆயிரம் ரூபாயை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளார்.
ஊடகத்தால் மாற்றுத்திறனாளிக்கு கிடைத்த நன்மை
அதன்படி அந்த தொகைக்கான காசோலையை சின்னக்கண்ணுவிடம் மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின்போது டி.ஆர்.ஓ ராஜேஸ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.
இதையும் படிங்க:புனித் மரணத்திற்கு பின் மருத்துவமனை நோக்கி படையெடுக்கும் பொதுமக்கள்