தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் உதயா தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் வரவு, செலவினங்கள் குறித்து அறிக்கை வாசிக்கப்பட்டது. அப்பொழுது ஒரு சில பணிகளை செய்யாமலேயே, நிதி எடுப்பதாக மன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்றிய பொது நிதியிலிருந்து சமையல் கூடம் கட்டுவதற்கு நான்கு இடங்களுக்கு ஒன்றிய குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாமல், இரவு 8 மணி அளவில் ஒப்பந்தம் விடப்பட்டதாக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் இருப்பினும் அந்த பணிகளுக்கு அதிகாரிகள் ஒப்பந்தம் விடாமல், ஒன்றிய குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குத் தெரியாமல் நள்ளிரவில் ஒப்பந்தம் வைத்துள்ளனர். அதனை முதலில் ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அப்பொழுது மன்றத்தில் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ஒன்றிய குழுவிற்கு வருகின்ற பொது நிதிகளை ஒன்றிய குழு தலைவருக்கே தெரியாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றிய குழு துணை தலைவர் இருவரும் இணைந்து ஒப்பந்தங்களை விடுவதாகவும், மற்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.
அதேபோல் கடத்தூர் அருகே உள்ள மணியம்பாடி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் செய்யப்படுகின்ற பணிகளுக்கு பணியாளர்களை பயன்படுத்தாமல், ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு வேலை செய்துவிட்டு, பிறகு பணியாளர்கள் செய்தது போல் ஊராட்சி நிதியில் பணம் பெறுவதற்கு பணியாளர்கள் ஒருவருக்கு தலா 500 ரூபாய் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பணிதல பொறுப்பாளர்கள் தமிழ்செல்வி வசூல் செய்வதாக மன்ற உறுப்பினர்கள் புகார் எழுப்பினர்.
மேலும் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா சரவணன் இது குறித்து யாரிடமாவது முறையிட்டாலும் அடுத்த நாள் வேலை வழங்க முடியாது என்று தெரிவிப்பதாகவும், மேலும் இதை எங்கு வேண்டுமென்றாலும் புகார் தெரிவிக்கலாம். இதில் பிடிஓ வரைக்கும் பணம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனை மன்ற உறுப்பினர் நேரடியாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன் மற்றும் ஜெகதீசன் இருவர் முன்னிலையிலும் பகிரங்கமாக தெரிவித்தனர்.
முறைகேடுகள் குறித்து உறுப்பினர்கள் தெரிவித்ததால், செய்தியாளர்களை படம் எடுக்கக் கூடாது என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்து செய்தியாளர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன் மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க கூடாது என கூறி கூட்டத்தில் இருந்து வெளியேறினார். சிறிது நேரம் கழித்து நடைபெற்ற கூட்டத்தில் நள்ளிரவில் விடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், அந்த ஒப்பந்தம் வழங்கிய அதிகாரியை நீதிமன்றம் வரைக்கும் கொண்டு செல்வோம் என போராடினர்.
மேலும் மக்களுக்கு சேவை செய்ய வந்த தங்களுக்கு தெரியாமல், பணிகளை மேற்கொண்டதால் இங்கே கொடுக்கின்ற தேநீரை குடித்தால் கூட அது மக்களுக்கு செய்கின்ற துரோகம் என தேநீரை வாங்க மறுத்து விட்டனர். இதனால் கடத்தூர் ஒன்றிய குழு கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 4 லாரிகளுடன் எஸ்கேப்... 150 டன் பொட்டாஷ் உரத்துக்காக நடந்த கடத்தல்... துணிவுடன் மடக்கிய தூத்துக்குடி போலீஸ்!