தருமபுரி: நல்லம்பள்ளி வாணியர் தெரு குடியிருப்பில் கிருஷ்ணசாமி என்பவர் ஹோமியோபதி படித்துவிட்டு, ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக அலுவலர்களுக்கு புகார்கள் சென்றுள்ளன. இதனையடுத்து தருமபுரி சரக மருந்து ஆய்வாளர் சந்திரமேரி தலைமையிலானோர், கிருஷ்ணசாமியின் மருத்துவமனையில் ஆய்வுமேற்கொண்டனர்.
ஆய்வில் படுக்கை வசதியுடன் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்தது கண்டறியப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட தொடர் சோதனையில் அலோபதி மருந்து, மாத்திரைகள், காலி டப்பாக்கள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் மூட்டை, மூட்டையாகக் கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து கிருஷ்ணசாமியிடம் ஆங்கில மருத்துவப் படிப்பிற்கான சான்றிதழ் குறித்து அலுவலர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது வீட்டிலிருந்து சான்றிதழை எடுத்துக் கொண்டுவந்து காட்டுவதாகக் கூறிய கிருஷ்ணசாமி, அங்கிருந்து தலைமறைவானார்.
பின்னர் மருத்துவத் துறை அலுவலர்கள், அதியமான்கோட்டை காவல் துறையினருக்குத் தகவலளித்து மருத்துவமனைக்குச் சீல்வைத்தனர். தலைமறைவான போலி மருத்துவர் கிருஷ்ணசாமியைத் தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணசாமி அதிமுக மாவட்ட மாணவரணிச் செயலாளராகச் செயல்பட்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Sexual Harassment Case: தலைமறைவான தாளாளர் கோர்ட்டில் சரண்