தருமபுரி மாவட்டத்தில் அரிய வகை ஆலம்பாடி மாடுகளை விவசாயிகள் அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். ஆலம்பாடி வகை மாடுகளை கர்நாடகா மற்றும் தமிழ்நாடு காவிரி கரையோர கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.
அழிந்துவரும் இனமான இவ்வகை மாடுகளைக் காப்பாற்றும் வகையில் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட பல்லேனஅள்ளி கிராமத்தில் ஆராய்ச்சி மையம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டது.
நேற்று நடைபெற்ற விழாவில் 32 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள ஆலம்பாடி மாட்டின் ஆராய்ச்சி மையம் தொடக்கவிழா மற்றும் புதிய கட்டடங்கள் கட்டுமான பணியை தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இணைந்து இருவரும் இன்று தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ‘காரிமங்கலம் பகுதியில் அமைந்துள்ள ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையம் 32 ஏக்கர் நிலப்பரப்பில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. ஆராய்ச்சி மையத்தில் ஆலம்பாடி மாடுகள் உற்பத்தியைப் பெருக்குவதும் ஆலம்பாடி காளைகள் மற்றும் புள்ளி காளைகள் மாடுகளைக் கொண்டுவந்து அதன் மூலம் இனப்பெருக்கம் செய்து இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு குறைந்த விலையில் ஆலம்பாடி மாட்டின கன்று குட்டிகள் வழங்கப்படும்.
ஆராய்ச்சி மையத்தில் குறைந்த விலையில் சத்தான மாடுகளுக்கு தேவையான தீவனங்கள் விற்கப்படும். இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளதால் சுற்றியுள்ள விவசாயிகளுக்கும் கிராம மக்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்’ என்றார்.
இதையும் படிங்க: "கால்நடைகளுக்கு தீவனங்களை ஆய்வுசெய்து கொடுங்கள்" - அமைச்சர் வேண்டுகோள்!