தருமபுரி மாவட்ட மக்களின் முக்கிய பண்டிகைகளாக ஆடி முதல் நாள் மற்றும் ஆடி 18ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஆடி 18ஆம் தேதியன்று மாவட்ட மக்கள் ஒகேனக்கல் ஆற்றங்கரையில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.
பாரம்பரியமான இந்த ஆடிப்பெருக்கு திருவிழா இந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று காரணமாகவும், பொதுமக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதாலும், ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பதாக மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
தொடா்ந்து பேசிய ஆட்சியா், தருமபுரி மாவட்டத்தில் அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து சிறப்பான முறையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி பகுதிகளில் பூக்கடை மற்றும் துணிக்கடைகளில் வைரஸ் தொற்று பரவியதன் காரணமாக முக்கிய நான்கு தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி முழு ஊரடங்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், இந்தாண்டு ஆடிப்பெருக்கு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.