கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிரேஸ். இவரது மகன் லட்சுமிபதி (15). இவர், பள்ளியில் பத்தாம் வகுப்பு படிந்து வந்தார். இந்நிலையில், லட்சுமிபதி, தந்தை கிரேஸ், உறவினர்களுடன் துக்க நிகழ்ச்சி ஒன்றுக்காக நேற்று (பிப்.28) ஒகேனக்கல்லுக்கு வந்துள்ளார்.
இதையடுத்து, சாரணர் பயிற்சி மையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் லட்சுமிபதி, தந்தை கிரேஸுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக லட்சுமிபதி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை கிரேஸ் அக்கம் பக்கதினரிடம் உதவி கோரிய நிலையில் அங்கிருந்தவர்கள காப்பாற்ற முயற்சி செய்தும், லட்சுமிபதி தண்ணீரில் மூழ்கினார்.
இது குறித்து ஒகேனக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு, காவல் துறையினர் இணைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட லட்சுமிபதியை 2 மணிநேர தேடுதலுக்கு பின் சடலமாக மீட்டனர்.
தொடர்ந்து, காவல் துறையினர் லட்சுமிபதியின் உடலை உடற்கூராய்விற்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஒகேனக்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குட்டையில் மூழ்கி வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு!