தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பெரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னசாமி (55). இவர், பிக்கிலி வனப்பகுதியிலுள்ள தேவர் மடுவு பகுதியில் தனது மாடுகளை மேய்ப்பதற்காக காட்டுக்குள் சென்றுள்ளார். வழக்கமாக மாடுகளை மேய்த்துவிட்டு இரவில் வீடு திரும்பும் சின்னசாமி, நேற்று வீடு திரும்பவில்லை.
இதனையறிந்த அவரது உறவினர்கள் காட்டுக்குள் சென்று சின்னசாமியை தேடி வந்தனர். அப்போது, தேவர் மருவு பகுதியில் யானை மிதித்து உடலில் காயங்களுடன் சின்னசாமி இறந்து கிடந்தது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்த பாலக்கோடு வனச்சரகர் செல்வம், பாப்பாரப்பட்டி காவல் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர், சின்னசாமியின் உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதி மக்கள் காட்டுக்குள் செல்லவேண்டாம் என வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: யானையை கொடூரமாகத் தாக்கும் பாகன் - பணியிடை நீக்கம் செய்த அரசு