அரூர்: தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் மக்களின் குடிநீர் ஆதாரமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது. பென்னாகரம் மடம் பகுதியில் இருந்து ராட்சத குழாய் மூலம் சாலையின் ஓரமாக பல்வேறு ஊர்களுக்கு சுத்திகரிக்கப்படட குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் பகுதிகளுக்கு ஒடசல்பட்டி மூக்கனூர் வனப்பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியிலிருந்து நீரேற்று மூலம் ஒகேனக்கல் குடிநீர் செல்கிறது. தற்போது தருமபுரி முதல் மொரப்பூர், அரூர், திருவண்ணாமலை வரை இரண்டு வழி சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தி சாலை பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
இதனால் மொரப்பூர் - அரூர் சாலையில் தம்பிசெட்டிபட்டி அருகே சாலை விரிவாக்க பணிக்காக பைப்லைன் இயந்திரம் மூலம் பள்ளங்கள் தோண்டும் பொழுது சாலை ஓரம் செல்லுகின்ற பிரதான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சுமார் 4 மணி நேரமாக வெள்ளம் பெருக்கெடுத்து அருகில் ஏரிக்கு செல்கிறது. இதனால் சாலையோரம் இருந்த மூன்று வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. மேலும் வீணாக செல்லும் தண்ணீர் அருகில் உள்ள ஏரிக்கு செல்வதால் அரூர், தீர்த்தமலை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒகேனக்கல் குடிநீர் வினியாகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய 4 நாட்களுக்கு மேலாகும் என ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தேனியில் பெட்ரோல் பங்கில் பணம் கேட்டு மிரட்டிய சிவசேன கட்சியினர் கைது!