தருமபுரி: அரூர் டி.அம்மாபேட்டையைச் சேர்ந்த இளைஞர்கள் 25க்கும் மேற்பட்டோர், ஓசூர், கர்நாடக பகுதிகளில் உள்ள பட்டாசு குடோன்களில் வேலை செய்வதற்காக சென்றுள்ளனர். இதில் 15 இளைஞர்கள் ஒரு பகுதிக்குச் சென்ற நிலையில், மீதமுள்ள 10 இளைஞர்கள் தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு குடோனில் வேலை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று (அக்.07) பட்டாசு குடோனுக்குத் தேவையான பட்டாசுகள் கண்டைனர் லாரி மூலம் குடோனுக்கு வந்துள்ளது. இதனை இறக்கும் பணியில் குடோனில் வேலை செய்த 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
தீ முழுவதுமாக பரவி குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில், அங்கு வேலை செய்திருந்த லோகேஷ் மற்றும் பீமாராவ் இருவரும் தப்பி வெளியில் வந்துள்ளனர். ஆனால், குடோன் உள்ளே இருந்த மற்றவர்கள் வெடி விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
இதில், தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையைச் சேர்ந்த வேடப்பன், இளம்பரிதி, ஆதிக்கேசவன், விஜயராகவன், ஆகாஷ், கிரி, சச்சின் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் நீப்பத்துறை கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் ஆகிய 8 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
இதனால், டி.அம்மாபேட்டை கிராமம் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது. மேலும், இறந்தவர்களின் வீட்டு அருகே உறவினர்கள் சூழ்ந்து கதறி அழுகின்றனர். இந்த காட்சி பார்ப்பவர்கள் நெஞ்சை உலுக்கும் நிலையில் இருக்கிறது. ஒரு கிராமத்தைச் சார்ந்த 7 இளைஞர்கள் பட்டாசு வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தருமபுரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: karnataka Cracker Shop Fire : கர்நாடகா பட்டாசு கடையில் தீ விபத்து! 11 பேர் பலி! தமிழர்கள் உயிரிழப்பா?