தருமபுரி: பாலக்கோடு அருகே மணியகாரன் கொட்டாய் கிராமத்தில் உள்ள ஜெர்த்தலாவ் பெரிய ஏரியில் தேன்கனிக்கோட்டை, சானமாவு உள்ளிட்ட பகுதியிலிருந்து உணவு தேடி வந்த 3 காட்டு யானையும் 2 குட்டி யானைகளும் ஏரியில் இன்று (பிப்.7) தஞ்சம் அடைந்துள்ளது.
பெரிய காட்டு யானைகளுடன் குட்டிகள் ஏரியில் உள்ள நீரில் குளியல் போட்டு கும்மாளமிடும் காட்சியை அவ்வழியாகச் சென்றவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமங்களுக்குக் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருகின்றன. இதனால், விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் சேதமடைந்து வருவதுடன், கிராம மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.
வனத்துறையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈச்சம்பள்ளம் அருகே சுற்றி திரிந்த 20 வயது மக்னா யானையை பிடித்து ஆனைமலை முகாமிற்கு அனுப்பி வைத்த நிலையில் மீண்டும் மணியகாரன் கொட்டாய் கிராமத்தில் உள்ள ஜெர்த்தலாவ் பெரிய ஏரியில் குட்டி யானை உட்பட 5 யானைகள் முகாமிட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 அரியவகை குரங்கு குட்டிகள்!