தருமபுரியில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை, தருமபுரி மாவட்ட சிறுதானிய உழவர் உற்பத்தி நிறுவனம் சார்பில் நடைபெற்ற சிறுதானிய கருத்தரங்கு மற்றும் விதை திருவிழாவை மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு, 40 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. தருமபுரி மாவட்டத்தில் 63 ஆயிரத்து 890 ஹெக்டேர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சிறு தானியங்கள் உற்பத்தி ஒரு லட்சத்து 52 ஆயிரம் மெட்ரிக் டன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறு தானியத்தில் அதிக அளவில் உணவு சத்துக்கள் உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். நமது பாரம்பரிய உணவு சிறுதானியம் மட்டுமே. பண்டைய காலத்தில் அரிசி உணவு, பண்டிகைக்கு மட்டும்தான் இருந்தது. பெரும்பாலான மக்களின் அடிப்படை உணவு தானியங்கள் என்பதை நாம் உணர வேண்டும்.
சமீப காலமாக நமது மக்களின் உணவுப் பழக்கம் மாறிக்கொண்டே வருகிறது. அரிசி சாப்பாட்டிலிருந்து அனைவரும் சிறுதானியத்திற்கு மாறிக் கொண்டே வருகிறோம். தருமபுரி மாவட்டத்தை பொருத்தவரையில், சிறு தானிய விவசாயத்தை பெருக்கும் நோக்கில் 900 ஏக்கர் பரப்பளவில் 857 விவசாயிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 43 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: மாமியார் - மருமகள் ஊட்டிக்கொண்டால் சாப்பாடு இலவசம்!