தருமபுரி: மொரப்பூர் அடுத்த வகுத்தானூர் கிராமத்தில் வசித்து வந்த சாக்கம்மாள்(எ) புஷ்பவதி(52) என்பவர் வீட்டில் சட்டத்திற்கு புறம்பாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் கருவி மூலம் கண்டறிந்து கடந்த ஒரு ஆண்டாக கூறி வந்துள்ளார். இந்த சட்ட விரோதமான செயல், ஒரு வருடத்திற்கு மேலாக நடந்து வந்த நிலையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்திக்கு இது குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், தருமபுரி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், இணை இயக்குநரின் அறிவுறுத்தலின்படி, அரூர் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதைத்தொடர்ந்து, அங்கு சட்டத்திற்கு விரோதமாக செயலில் ஈடுபட்ட அந்த கும்பல் ஒரு பெண்ணிடம் 26,400 ரூபாய் வாங்கும்போது, கையும் களவுமாக பிடிபட்டனர். தொடர்ந்து மொரப்பூர் காவல் நிலையத்திற்கு அந்த கும்பலை அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
திடுக்கிடும் தகவல்: கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக வகுத்தானூர் கிராமத்தில் உள்ள சாக்கமாள்(எ)புஷ்பாவதி என்பவரது வீட்டில் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கவியரசன்(28), ஐயப்பன்(34) மூவரும் முறையான மருத்துவம் படிக்காமல் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டறிந்து சொல்வதற்கு 30 ஆயிரம் ரூபாய் வரை வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையத்தை சேர்ந்த டிரைவர் மனோஜ்குமார்(24), இந்த சம்பவ இடத்திற்கு வாடகை வண்டியில் சவாரிக்காக மட்டுமே வந்ததாக தெரிய வந்ததை அடுத்து அவரை விடுவித்தனர்.
தீவிர விசாரணை: மேலும், சட்டத்திற்கு விரோதமான இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வந்த மூன்று நபர்களில் சாக்கம்மாள் (எ) புஷ்பவதியை சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். கவியரசன் மற்றும் ஐயப்பனை அரூர் கிளை சிறையில் அடைத்தனா். இந்த கும்பல் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் மட்டும் தெரிவித்ததா? அல்லது கருகலைப்பு உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டார்களா? இந்த சட்ட விரோதமான செயலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது? என்பன உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல, தருமபுரியில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கடந்த 2022ஆம் ஆண்டு மே 30 மாதம் கருக்கலைப்பு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் ஸ்கேன் செய்யும் இயந்திரம் மூலம் சதீஸ்குமார், சுதாகர், கருக்கலைப்புக்கு உடைந்தையாக செவிலியர் கற்பகம், அவரது கணவர் விஜயகுமார், இடைத்தரகராக இருந்த ஜோதி சரிதா, ஆட்டோ டிரைவர் வெங்கடேசன், குமார் உள்ளிட்டோரை தருமபுரி நகர காவல்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தருமபுரி மாவட்டத்தில் வீட்டிலேயே ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என சோதனை செய்த சம்பவத்தின் பின்னணியில் எத்தனை ஒரு பாவமும் அறியாத சிசுக்களின் உயிர் பறிபோயிருக்கும் என தெரியவில்லை. இது குறித்து போலீசார், மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் உள்ளிட்டோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லி மதுபான கொள்கை வழக்கு - அமலாக்கத்துறையை எதிர்த்து கேசிஆர் மகள் கவிதா மனு - இன்று விசாரணை!