தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அரசு முதன்மை செயலாளர் மருத்துவர் அதுல் ஆனந்த் தலைமையில், நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் பேசியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி தற்போது தமிழ்நாட்டில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் 2 ஆயிரத்து 79 படுக்கை வசதிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை ஆயிரத்து 30 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், 200 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் அமைக்க தற்போது போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஒரு வார காலத்திற்குள் இப்பணிகள் நிறைவுபெறும். மினி கிளினிக்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.