நடிகர் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகிவரும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் 12ஆம் தேதி வரை இந்த படப்பிடிப்பு நடைபெறுகிறது.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு வந்த வருமான வரித்துறை அலுவலர்கள் விஜய்யை தங்களுடன் அழைத்துச் சென்று பின்னர் சென்னையிலுள்ள அவரது வீட்டில் சோதனை செய்தனர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே கடந்த 6ஆம் தேதி முதல் மீண்டும் என்எல்சியில் நடைபெறும் படப்பிடிப்பில் விஜய் பங்கேற்றுள்ளார். அப்போது அங்கு வந்த பாஜகவினர் சிலர் விஜய்யின் படப்பிடிப்புக்கு அளித்த அனுமதியை ரத்து செய்யக்கோரி என்எல்சி சுரங்க நுழைவு வாயில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக சுரங்கம் முன்பாக குவிந்த விஜய் ரசிகர்கள் மீது காவல் துறையினர் தடயடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.
இதனிடையே இன்று மீண்டும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் சுரங்கம் முன்பாகக் குவிந்தனர். அப்போது இன்றையப் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வெளியே வந்த நடிகர் விஜய், வேன் மீது ஏறி தனது ரசிகர்களைக் கண்டு கையசைத்தார். பின்னர் ரசிகர்கள் கூட்டத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட அவர், அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆரவாரம் செய்தனர். விஜய்யை காண குவிந்த ரசிகர்களை அங்கிருந்த மத்திய பாதுகாப்புப் படையினர், காவல் துறையினர் உள்ளிட்டோர் கட்டுப்படுத்தினர்.
இதையும் படிங்க: தனுஷின் #D40 ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிப்பு