கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. 16 கிலோ மீட்டர் நீளம் கொண்டு, பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி, கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.
இந்நிலையில், வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 47 அடியாக உயர்ந்தது. இதனால் ஏரி, கடல் போல் காட்சி அளிக்கிறது. 34 மதகுகளும் திறக்கப்பட்டன. விநாடிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் 102 கிராமங்களில் 44,856 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயி கூறுகையில்; 'காவிரிப் படுகையின் கடைமடை பகுதியான கீழணையில் இருந்து தண்ணீர், வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிருக்கிறது. கர்நாடக மலைப்பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு வீராணம் ஏரி, மேட்டூர் அணையில் காவிரி நீர் நிரம்பி கொண்டு இருக்கிறது.
இதைத் தொடர்ந்து உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது. சம்பா சாகுபடியை முறையாக செய்யும் வாய்ப்பு இந்த ஆண்டு உருவாகியுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியான தருணத்தில் இருக்கிறோம்.
மேலும் ஊடுபயிராக உளுந்து சாகுபடியும் செய்யக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என உணர்வுப்பூர்வமாக தெரிவித்தார்.